பழனிசாமி அரசுக்கு ஆதரவு குறித்து ஆலோசனை: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைவந்தால் முதல்வர் கே.பழனி சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுகவில் 3 அணிகள் உருவாகியுள்ளதால், வரும் 14-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல் வத்தின் ஆதரவாளரான பாண்டிய ராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆட்சிக்கு பங்கம் வந்தால் பாண்டியராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட இவர்கள் (இபிஎஸ் அணியினர்) பக்கம் வாக்களிப்பார்கள்’ என்று வேறொருவர் தெரிவித்த கருத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லியில் பாண்டியராஜன் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகவும் பிரமாண்டமாக வரும் 11-ம் தேதி திருவேற்காட்டில் நடக்கிறது. சசிகலாவையும் தினகரனையும் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கினால்தான் இரு அணிகளும் இணையும்’’ என்றார்.
பின்னர் திருத்தணியில் பாண்டிய ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.