கடல் வளங்களைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை தேவை: ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் ‘கடல் மற்றும் சமுத்திர ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கடல்சார் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.
வரும் 9-ம் தேதி வரை நடை பெறும் மாநாட்டில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், கடல் வளங்களைப் பாதுகாப்பது, அவற்றைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது பற்றிய கருத்துகள் பரிமாறப் படுகின்றன.
இதில் ஐநா பொதுச் செயலா ளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது:
நமது சமுத்திரங்களை கையாள்வதற்கான ஒரு புதிய மாதிரியை வரையறுக்கத் தேவையான ஆலோசனையில் கலந்து கொள்ள அனைத்து நாடுகளையும் வரவேற்கிறேன். நாடுகள் தங்களுடைய குறுகிய கடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பன்முகத் தன்மைக்கான ஒரு சோதனை ஆகும். இதில் நாம் தோல்வி அடைய முடியாது. கடல் பாது காப்பு மற்றும் நிலையான பயன் பாடு ஆகியவை நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவு மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்களின் பாதுகாப்பை விரிவு படுத்தவும் தேவையான நடவடிக் கைகள் எடுக்க சட்டக் கட்டமைப்பு அடிப்படையில் உறுதியான அரசியல் தலைமை மற்றும் புதிய கூட்டணிகள் அவசியமானது. நீண்டகால பூகோள பேரழிவைத் தடுக்க குறுகிய கால தேசிய லாபத்தை ஒதுக்கிவைக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் உடன்படிக்கை மற்றும் ‘அட்டிஸ் அபாபா’ செயல்திட்ட உடன்படிக்கையின்படி வரும் 2030-ம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்க ஒத்துக்கொண்ட நிதியை நாடுகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.