தினகரனை நீக்கி வைக்கும் விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும் – நாஞ்சில் சம்பத்
தினகரனை நீக்கி வைக்கும் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
குமரி மேற்கு மாவட்டம் மணக்காவிளையில் நாஞ்சில் சம்பத் இன்று மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமற்ற முறையில் பேசி வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாதபோது அவருக்கு மீனவரணி செயலாளர், நிதி அமைச்சர் என பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்தவர் சசிகலா மற்றும் தினகரன்.
ஆனால் இப்போது அவர், வரம் தந்த சாமி தலையில் கை வைக்க பார்க்கிறார். அவருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது. ஆட்டு விக்கிறவர் மூலம் ஆட வைக்கப்படுகிறார். சசிகலா, தினகரனை விலக்கி வைப்பதாக வீராப்பு பேசும் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தவர் யார்?
தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது. இதில் கலந்து கொள்ள மதுரை, தேவக் கோட்டை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, உசிலம்பட்டி, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு நானும், புகழேந்தியும் சென்றோம்.
தூத்துக்குடியில் 1986 முதல் பல்வேறு கூட்டங்களில் பலமுறை பேசியுள்ளேன். அப்போது எனக்கு கூடிய கூட்டத்தை விட இப்போது பலமடங்கு கூட்டம் திரண்டது. இது தினகரனுக்கு ஆதரவாக திரண்ட கூட்டம். அவரை பொய் வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய கூட்டம்.
தொண்டர்கள், தமிழக மக்கள் தினகரனை ஆதரிக்கிறார்கள். ஆட்சியையும், கட்சியையும் அவர் வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் வரம்பு மீறி பேசுகிறார். அவர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நாவடக்கத்துடன் பேச வேண்டும். இல்லையேல் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம்.
ஜெயக்குமார் ஆணையிடுவதாக இருந்தால் அவரது அலுவலக உதவியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். அதை விடுத்து சசிகலா, தினகரனுக்கு உத்தர விட முடியாது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்ந்து நடை பெற வேண்டும். அவர், இப்போது எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார். இது விரைவில் தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தில் பேச வேண்டிய தொகுதி பிரச்சினைகள் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டமாகும்.
ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஓ.பி.எஸ்சையும், பாண்டியராஜனையும் தவிர்த்து யார் வந்தாலும் வரவேற்போம்.
தினகரனை இப்போது சந்தித்து வரும் எம்.எல்.ஏ.க் களின் எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.