கரூரில் கைதான பெண் மாவோயிஸ்ட்டுகளின் காவல் ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிப்பு
கரூர் பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா, மற்றும் வக்கீல் முருகனுக்கு ஜூலை 5-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரூர் வெங்கமேடு கணக்கு பிள்ளை தெருவில் பதுங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட்களான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த கலா (வயது52), சந்திரா(45) ஆகிய 2 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கடந்தாண்டு ஜூலை 21-ந்தேதி கரூரில் கைது செய்தனர்.
பின்னர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மாவோயிஸ்ட்களுக்கு உதவியதாக மதுரை மாவட்டம் ஆலங்குளம் அன்புநகரை சேர்ந்த வக்கீல் முருகனை (35) கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த ஜனவரி 8-ந்தேதி கைது செய்து, கரூர் மாவட்ட முதன்மைநீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன் பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா, வக்கீல் முருகன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வருகிற ஜூலை 5-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.