மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. 1 கோடி மாணவ – மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
மாணவ – மாணவிகளுக்கு வழங்குவதற்காக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு உரிய பாடப் புத்தகங்கள் ஆகும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பருவம் அல்லாத வகையில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1 கோடி மாணவ – மாணவிகளுக்கு இன்று விலையில்லா பாடப் புத்தககங்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி விருகம்பாக்கம் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகளை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியாவது:-
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வரக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் மத்திய அரசு நடத்தும் எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவ – மாணவிகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சியும் கொடுக்க இருக்கிறோம்.
அடுத்த ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை இப்போதே வெளியிட்டதால் மாணவ – மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைந்துவிடும். பரீட்சை வருகிறதே என்ற ஏக்கம் இருக்காது.
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 1 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, சத்யா மற்றும் கமலக்கண்ணன், ஜெயவர்தன் எம்.பி., அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.