உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மேற்கு தனேந்திரன் 29.1.2016 அன்று மின் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில், உயிரிழந்தார்.
தூத்துக்குடி லட்சுமிபுரம் கிராமத்தில் 6.5.2017 அன்று கிணறு தோண்டும் போது, விஷ வாயு தாக்கியதில் ஜெபஸ்தியான் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விழுப்புரம் புதுகழுவாச்சி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
வேலூர் கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகனம் மின்மாற்றியில் மோதியதில், உயிரிழந்தார்.
திருநெல்வேலி திம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனராக பணியாற்றிய தவுலத்ஷா அரசுப் பேருந்திலிருந்துதவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூர் விநாயகன்தெரு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவருடைய மகள் ஹாசினி மற்றும் மகன் மாதவன் ஆகிய மூன்று பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கும் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.