ரூ.1,089 கோடி வருவாய் இழப்பு: கிரானைட் முறைகேடு வழக்குகளில் பி.ஆர்.பி. மீது குற்றப்பத்திரிகை

மேலூர் கோர்ட்டில் இன்று பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம் மீது 4,553 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசுக்கு ரூ.1,089 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு, மேலவளவு உள்ளிட்ட பல கிராமங்களில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது, அரசு புறம்போக்கு நிலங்களில் அடுக்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.

இன்று மேலூர் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஷீலா, கிரானைட் குற்ற வழக்குகளை விசாரிக்கும் ஆய்வாளர்கள் ராஜா சிங், பிரகாஷ், முத்துப்பாண்டி ஆகியோர் பி.ஆர்.பி. நிறுவனம் மீதான 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கீழவளவு காவல் சரகத்திற்குட்பட்ட நவன்முடி குளம் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி உடைத்து சேதப்படுத்தியதில் அரசுக்கு ரூ.119 கோடியே 84 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி. உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 25 பேர் மீது 2708 பக்க குற்றப்பத்திரிகை ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலூர் அருகே நாவினிப்பட்டி பகுதியில் கிரானைட் கற்களை வெட்டிஉடைத்து சேதப்படுத்தி அரசுக்கு ரூ. கோடியே 28 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 23 பேர் மீது 1420 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல் கீழவளவு பகுதியில் கிரானைட் கற்களை வெட்டிஉடைத்து சேதப்படுத்தி அரசுக்கு ரூ.968 கோடியே 5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன் செந்தில்குமார் உள்பட 22 பேர் மீது 425 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *