ஒடிசாவில் வெயிலுக்கு 16 பேர் பலி: குஜராத்- ராஜஸ்தானிலும் கடும் பாதிப்பு
ஒடிசாவில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் 16 பேரும், குஜராத்தில் 2 பேரும் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலுக்கு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
வடமாநிலங்கள் பலவற்றில் இன்னும் வெயில் உச்சக்கட்டத்திலேயே உள்ளது. ஒடிசாவில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் 16 பேரும், குஜராத்தில் 2 பேரும் உயிர் இழந்துள்ளனர்.
ஒடிசாவில் ஏற்கனவே வெயில் தாங்க முடியாமல் 100 பேர் உயிர் இழந்து இருந்தனர். இன்னும் அதே அளவிலேயே வெயில் நிலைமை நீடிப்பதால் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
குஜராத்தில் வெயிலால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மட்டும் 10 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்னும் அதே நிலை நீடிக்கிறது.
உத்தரபிரதேசத்தில் இதுவரை வெயிலுக்கு 6 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையிலும் பல மாவட்டங்களில் வெயில் இன்னும் அதே நிலையயில் தான் உள்ளது.
அதிகபட்சமாக பண்டல் கண்ட் மாவட்டத்தில் 116.6 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது. இதே போல் பண்டா, மகோபா மாவட்டத்திலும் வெயில் நிலைமை மோசமாக இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலின் அளவு மோசமாக உள்ளது. ஜெய்ப்பூர், மிகேனர், ஜெய்சல்மார் மாவட்டங்களில் மிக அதிக பட்சமாக வெயில் உள்ளது.
நேற்று 106 டிகிரியில் இருந்து 107 டிகிரி வரை வெப்ப நிலை இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 116 டிகிரி வரை வெப்பம் இருந்தது.
டெல்லியை பொறுத்த வரை வெப்பம் சற்று தணிந்துள்ளது. அங்கு நேற்று வெப்பநிலை 93 டிகிரியாக பதிவாகி உள்ளது.