அதிபர் டிரம்ப் நிறுவனத்துடன் கைகோர்க்கும் இந்திய ஹோட்டல் அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகன்களின் நிறுவனமான டிரம்ப் ஹோட்டல்சுடன் இணைந்து அமெரிக்க இந்தியரான தினேஷ் சாவ்லா எனும் ஹோட்டல் அதிபர் புதிய சங்கிலித் தொடர் ஹோட்டல்களை அமெரிக்கன் ஐடியா எனும் பெயரில் துவங்கவுள்ளார்.
தினேஷ் சாவ்லாவின் தந்தை வி கே சாவ்லா 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு குடியேறிய போது டொனால்ட் டிரம்ப் எவ்வாறு விரைவாக ஹோட்டல் துவங்க கடன் பெறுவது என்று சொல்லிக்கொடுத்தாகவும், அவரும் பின்னர் மிஸ்ஸிசிப்பி பகுதியில் 17 ஹோட்டல்களை துவங்கியதாகவும் தெரிவித்தார். கனடா வழியே அமெரிக்கா வந்த வி கே சாவ்லா தனது முதல் ஹோட்டலைத் துவங்க நிதியுதவி கிடைக்காமல் அவதிபட்டு வந்தார்.
பஞ்சாபில் பிறந்த தினேஷ்சும் அவரது சகோதரர் சுரேஷ் சாவ்லாவும் புதிய கூட்டில் இணைந்து செயலாற்ற உள்ளதை பெருமைமிக்கதாக கருதுகின்றனர். டிரம்ப் அலுவலகம் மார்ச் மாதம் தினேஷ்சை அழைத்து இத்திட்டம் பற்றி கூறியதாக தெரிவித்தார். டிரம்புடன் இணைந்து செயல்படுவது தங்களை சர்வதேச அளவில் செயல்பட வழி செய்துத்தரும் என்று நம்புகின்றனர் சாவ்லா சகோதரர்கள். இத்திட்டம் மூலம் 100 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார். நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் நிலவும் இக்காலத்தில் இந்த வாய்ப்பு பெரிய விஷயமாகும் என்கிறார் தினேஷ். அதிபர் தேர்தல் சமயத்தில் டிரம்பை சந்தித்தப்போது இது குறித்து பேசியதாக தினேஷ் தெரிவித்தார்.
புதிய ஹோட்டல் நடுத்தரவகை ஹோட்டல் பிரிவைச் சார்ந்ததாகும்.
துவக்க காலத்தில் தந்தையுடன் மிகக் கடினமாக பாடுபட்டு ஹோட்டல் தொழிலில் நிலைநின்றதாக தினேஷ் தெரிவித்தார். இன்று தந்தை இருந்தால், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், பெருமை அடைந்திருப்பார் என்றார்.
அரசியல் ரீதியில் டிரம்ப்பின் கொள்கைகள் ஏற்புடையது இல்லையென்றாலும் அவர்களின் தொழில்நேர்த்தி சிறப்பானது என்கிறார் தினேஷ். டிரம்ப் ஹோட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டான்சிகர் கூறுகையில் சாவ்லா சகோதர்களிடம் இணைந்து செயல்படுவது மிக்க அதிர்ஷ்டமுடையது. அவர்கள் சியோன் ஹோட்டலை நாங்கள் ஏற்று நடத்த சம்மதித்திருப்பது எங்களை கௌரவப்படுத்துவதாகும் என்றார். அமெரிக்கன் ஐடியா ஹோட்டல்கள் மிஸ்ஸிப்பியில் மூன்று இடங்களில் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சகோதர்கள் அமெரிக்க டாலரில் 20 மில்லியன்களை முதலீடாக இடவுள்ளனர். ஹோட்டல்கள் ஆறு அல்லது ஏழு மாதங்களில் செயல்படத் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *