ஈரான் பாராளுமன்றத்தில் புகுந்து மர்மநபர்கள் துப்பாக்கி சூடு – பொது மக்கள் சிறைபிடிப்பு

ஈரான் நாட்டின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பொது மக்கள் சிலரையும் பிணைக்கைதிகளாக சிறை பிடித்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெக்ரானில் பாராளுமன்றம் உள்ளது. இன்று காலை அங்கு துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் திடீரென உள்ளே புகுந்தனர். முன்னதாக ஒருநபர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த பாதுகாவலரின் காலில் துப்பாக்கியால் சுட்டான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மேலும் 3 பேர் உள்ளே புகுந்து சரமாரியாக சுட்டனர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். பொதுமக்கள் 2 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே சுடப்பட்ட பாதுகாவலரையும் சேர்த்து 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பாராளுமன்ற வளாகத்துக்குள் இருந்த பொதுமக்கள் சிலரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர்.

அவர்களை கேடயமாக வைத்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். 2 தீவிரவாதிகள் பாராளுமன்ற வளாகத்துக்குள் பதுங்கியுள்ளனர். அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இதற்கிடையே தெக்ரானில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. அங்குள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அருகே மறைந்த மதகுரு கோமெனியின் கல்லரை மாடம் உள்ளது.

அங்கு புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *