ஆர்.கே. நகர் தொகுதியில் இப்போது தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை

ஆர்.கே.நகரில் இப்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் டெல்லியில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:–-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–-ந் தேதி ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து தேர்தல் கமிஷன், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாதாரணமான சூழ்நிலையில் இந்த தொகுதியில் தேர்தல் நடந்திருக்க வேண்டியது 2021–-ம் ஆண்டு மே மாதம் 24-–ந்தேதி ஆகும்.
ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக காலியான இந்த இடத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்.
இதன்படி 2017-–ம் ஆண்டு மார்ச் 16–-ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிக்கையில் 2017 ஏப்ரல் 12-–ந் தேதியன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த தொகுதியில் பெருமளவில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யவும் வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கவும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டதால் கடந்த ஏப்ரல் 9–-ந்தேதியன்று இந்த தேர்தலை ரத்துசெய்து தேர்தல் கமிஷன் அறிவிக்கை வெளியிட்டது.
சூழ்நிலையில்
மாற்றம் இல்லை
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நிலுவையில் உள்ள இடைத்தேர்தலை மீண்டும் நடத்தும் வகையில் சூழ்நிலை உள்ளதா என்று அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் தற்போது வரை இந்த சூழ்நிலையில் எந்த மாறுதலும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டிய கெடு கடந்த ஜூன் 4–-ந் தேதி முடிவடைந்த நிலையில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை தொடருகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு அறிக்கை பெறப்பட்டது. அவரும் அங்கு சுதந்திரமான முறையில் நடத்தும் வகையில் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் இடைத்தேர்தலை மேலும் ஒத்திவைப்பது குறித்த பிரச்சினைகள் பற்றி மத்திய சட்ட அமைச்சகத்திடம் விளக்கமாக கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகமும் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
எனவே தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் தகுந்த சூழ்நிலை அமைந்ததும் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *