எடப்பாடி ஆட்சிக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் வராது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகிறது, நீங்கள் தனி அணியாக இருக்கிறீர்கள், இதனால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் “ தற்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாவட்ட வாரியாக அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் என்ன என்று கேட்டு வருகிறார். தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். நேற்று 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இன்று 2–வது நாளாக விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்.
இதற்கிடையே டிடிவி. தினகரனையும் செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், வெற்றிவேல், ராஜன் செல்லப்பா உட்பட எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகிறார்கள். இன்று டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளரான பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அளித்த பேட்டி வருமாறு:-
சென்னையில் அண்ணா தி.மு.க. கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். அதில் ஜெயலலிதா இல்லை. மீதமுள்ள 5 பேரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினோம். இது சாதாரண முறையிலான சந்திப்புதான்.
எனது நிலைப்பாடு எதுவோ, அதுதான் டிடிவி. தினகரனை சந்தித்துள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடும் ஆகும். எங்களால் அரசுக்கு எந்த வித நெருக்கடியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி திருவிழாவிற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் பேசுகையில், எங்களுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எடப்பாடி ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. நெருக்கடியும் இல்லை என்று கூறினார்.
ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் பேசுகையில், தினகரனை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு பொதுச் செயலாளர் சசிகலா; துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன். கட்சியில் வெளியாட்கள் யாரும் இல்லை. எல்லோரும் அண்ணா தி.மு.க.வினர் தான். பிரச்சினைகள் எல்லாம் சரியாகி விடும். அனைவரும் பக்குவமாக பேசுகிறார்கள். இது ஒரு பெரிய கட்சி. மாற்று கருத்துக்கள் இருக்கும். எல்லாம் சரியாகி விடும். பிரச்சினைகள் வரும்போது தான் விசுவரூபம் எடுக்கும் என்று கூறினார்.
சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று நிருபர்களிடம் பேசும்போது, விரைவில் தேர்தல் வரும் என்று நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது என்று கூறினார்.