கத்தார் விவகாரம்: சமரச முயற்சியில் குவைத், துருக்கி நாடுகள் தீவிரம்

கத்தார் மீது தூதரக தடை விதித்த 5 அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 5 அரபு நாடுகள் துண்டித்தன.
சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம் ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
இதனால் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக கத்தார் மீது தூதரக தடை விதித்த 5 அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல்- ஜாபர் சவுதி அரேபியா மன்னர் சல்மானை சந்தித்து பேச வேண்டும் என வளைகுடா அரபு நாடுகளின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இருநாடுகள் சமாதானத்துக்கு உதவ தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் தீவிரவாதத்துக்கு கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். சமீபத்தில் தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டேன். அப்போது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கத்தார் நிதியுதவி செய்யக்கூடாது என வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா மன்னர் சல்மானுடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், வளைகுடா நாடுகள் ஒற்றுமையாகவும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
கத்தாரை தனிமைப்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இம்மமானுவல் மேக்ரன் மற்றும் கத்தார் நாட்டுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு இப்பிரச்சினை குறித்து பேசினர்.
டொனால்டு டிரம்ப்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, கத்தார் நாட்டின் மீதான தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, தீவிரவாதத்திற்கு எதிராக போராட, பிராந்திய ரீதியிலான ஒற்றுமையை நிலைநாட்டவும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளின் ஒற்றுமையை உறுதி படுத்துங்கள் என்று சவுதி மன்னரிடம் டிரம்ப் கூறினார்.
முன்னதாக கத்தார் நாட்டுடனான உறவை அரபு நாடுகள் துண்டித்துள்ளதற்கு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *