சொத்து கணக்கை காட்டாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை
சொத்து கணக்கை காட்டாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை காட்ட வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஆனால், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே சொத்து கணக்குகளை காட்டினார்கள்.
எனவே, 2 முறை முதல்வர் காலக்கெடுவை நீடித்தார். இதன்படி 2 மாதத்துக்குள் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், 2 மாதம் முடிந்து விட்ட நிலையிலும் 185 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 250 ஐ.பி. எஸ். அதிகாரிகளும் இதுவரை சொத்து கணக்கை காட்டவில்லை.
இதனால் அவர்கள் மீது வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மூத்த அதிகாரி கூறும்போது, அதிகாரிகள் தங்கள் சொத்து கணக்கை காட்டும்படி 2 மாதம் அவகாசம் கொடுத்தும் 438 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கை காட்டவில்லை.
அவர்களுக்கு இன்னும் 2 வாரம் மட்டும் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் சொத்து கணக்கை அவர்கள் காட்டாவிட்டால் முறைப்படி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது சம்பந்தமாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு அதிகாரிகளுக்கு அளித்துள்ள காலவரம்பு முடியும் வரை நாங்கள் காத்து இருப்போம்.
அது முடிந்ததும அதிகாரிகளிடம் நாங்கள் விளக்கம் கேட்டு நடவடிக்கையில் இறங்குவோம் ஏற்கனவே குறிப்பிட்ட அதிகாரிகள் சம்பந்தமான கணக்கு வழக்கு விவரங்களை நாங்கள் தயாராக வைத்துள்ளோம். அவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும் சேகரித்துள்ளோம்.
அவர்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் பற்றிய தகவல்களையும் வைத்துள்ளோம்.
சொத்து கணக்கை காட்டாதவர்கள் மீது உரிய நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்வோம் என்று கூறினார்.