சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று பகல் 12 மணிக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் தமிழக காங்கிரஸ் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பாபிராஜூடன் திருநாவுக் கரசர் தனது அறையில் ஆலோ சனை நடத்திக் கொண்டிருந்தார்.
பகல் 12.45 மணியளவில் மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கும் மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜான்சிராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் அடிதடியாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கவுரி கோபாலும் ஹசீனா சையத் ஆதரவாளர்களும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். தகாத வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் பதவியில் இருந்து கவுரி கோபாலை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என ஹசீனா சையத் வலியுறுத் தியதாகவும், இது தொடர்பாக மாநிலத் தலைவர் ஜான்சி ராணிக் கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச் சியாக நேற்று இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நடந்தபோது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இருந்தார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திலேயே மோதிக் கொண்டது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மகளிர் காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்படும்’’ என்றார்.
ஜான்சிராணி கூறும்போது, ‘‘நடந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் போலீஸில் புகார் கொடுக்க வில்லை. மாநிலத் தலைவ ரிடமும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவரிடமும் புகார் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.