மாட்டை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம்: உரிமையாளர் போஸ்டர் ஒட்டிய ருசிகர சம்பவம்
ஜல்லிக்கட்டு காளையை காண வில்லை என அதன் உரிமையாளர் போஸ்டர் ஒட்டி சன்மானம் வழங்கு வதாக அறிவித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மக்கள் ஜல்லிக்கட்டையும், ஜல்லிக்கட்டு காளைகளையும் உயிராக நேசிப்பவர்கள். ஜல்லிக் கட்டுக்காக வளர்க்கும் காளைகளை குழந்தைகளை போல பராமரித்து ஜல்லிக்கட்டில் விளையாடவிட்டு ரசிப்பவர்கள். ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து தடை விதித்தபோது, அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம்தான், மெரீனா வரை நீடித்து ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து, பெரும் போராட்டமாக மாறியது.
அலங்காநல்லூர் மக்களின் அந்த நம்பிக்கைதான் தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதிபெற்று தந்துள்ளது. அதனால், மதுரை மக்களையும், ஜல்லிக்கட்டு காளையை பிரித்துப் பார்க்க முடியாது. அப்பேர்பட்ட ஜல்லிக்கட்டு காளை காணாமல்போனதால் மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த தினேஷ் (23) என்பவர் காணவில்லை என போஸ்டர் ஒட்டி தேடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இவர் ஆசையாக வளர்த்த 2 ஜல்லிக்கட்டு காளையில் ஒன்றை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடைசியில் ‘மாட்டை காணவில்லை’ என போஸ்டர்கள் தயாரித்து மதுரை முழுவதும் ஒட்டினார். அந்த போஸ்டரில், காணாமல்போன மாட்டின் படத்தை போட்டு, இதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று செல்போன் எண்களை குறிப்பிட்டிருந்தார்.
போஸ்டர்கள் ஒட்டி அதன் மூலம் தகவல் வருமா என்று ஒரு பக்கமும், மற்றொரு புறம் நண்பர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர்கள் மூலம் காளையை தேடி வந்தார்.
இவரின் இந்த போஸ்டர் வேடிக்கையாக போய்விடாமல் அவரது போஸ்டரை பார்த்த ஒருவர், திருவாதவூர் அருகே அந்த மாட்டை யாரோ கட்டிப்போட்டிருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்ற தினேஷ், அவரது உறவினர்கள் கட்டிப்போட்ட மாட்டை அவிழ்க்கச் சென்றனர். ஆனால், சிலர் அந்த மாட்டுக்கு சொந்தம் கொண்டாடியுள்ளனர். பின்னர், மாட்டின் விவரத்தை தினேஷ், அவருடன் சென்றவர்கள் ஊர்க்காரர்களிடம் தெரிவித்து பஞ்சாயத்து பேசி மாட்டை மீட்டு வந்துள்ளனர். தகவல் அளித்தவருக்கு தினேஷ் கூறியபடி ரூ.2 ஆயிரம் சன்மானம் கொடுத்துள்ளார்.