அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக: வாசன்

 

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஆகியவற்றுக்கான பணியடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7 கோடி. பொது மக்களுக்கு மருத்துவச் சேவையை இலவசமாக, தரமானதாக வழங்க வேண்டியது தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் கடமை.

தமிழகத்தில் உள்ள பொது மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளையே நம்பி வாழ்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய, சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நோயினால் பாதிக்கப்படும்போது பெருமளவு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.

இவர்களிடம் பொருளாதார வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற முடியாது. எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் திறம்பட செயல்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் ஒரு இலட்சம் மருத்துவர்கள் அரசுப்பணிக்குத் தேவை.

ஆனால் தற்போது சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகள் நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்திருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

மருத்துவர்களின் பற்றாக்குறையோடு, செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இன்னும் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதால் நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

காலதாமதத்தினால் நோயாளிகள் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய கட்டாயச் சூழலில் இருக்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவகால மாற்றத்தாலும், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கப்பெறாத காரணத்தாலும் ஏழை, எளிய மக்கள் நோயினால் பெருமளவு பாதிக்கப்படக்கூடிய சூழலில், அரசு மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

நோய்வருமுன் பொது மக்களை காப்பதற்கும், நோய்வந்தபின் காப்பதற்கும் தமிழக அரசு அனைத்துவிதமான சுகாதார நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க முன்வர வேண்டும்.

எனவே தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஆகியவற்றுக்கான பணியடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது மக்களுக்கான இலவச மருத்துவச் சேவையை காலத்தில் அளித்து, அவர்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *