மத்தியப் பிரதேசத்தின் மான்ட்சர் மாவட்டத்துக்குச் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருவதால் மான்ட்சர் மாவட்டத்துக்குச் செல்ல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மான்ட்சர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் 5 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. போலீஸ் சோதனைச் சாவடிகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். ஆட்சியர், மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோரும் கல்வீச்சால் தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து ராஜஸ்தான் வழியாக இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியப் பிரதேசம் புறப்படுகிறார்.

அனுமதி மறுப்பு

ராகுல் காந்தி மான்ட்சர் மாவட்டத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச காவல்துறை சிறப்புக் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் கூறும்போது, “வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மான்ட்சர் மாவட்டத்துக்கு செல்ல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறி ராகுல் காந்தி நுழைய முயற்சித்தால் அவர் கைது செய்யப்படுவார்” என்றார்.

ராகுல் காந்தி வருகையை ஒட்டி மான்ட்சரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மான்ட்சர் மாவட்டத்தில் வன்முறைகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவ்கானிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *