‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

‘குயின்’ ரீமேக் படத்தை தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழ்ப் படத்தில் காஜல் அகர்வாலும், கன்னடப் படத்தில் பருல் யாதவும் நடிக்க உள்ளனர்.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

திருமணத்துக்குப் பிறகு தேனிலவுக்காக பாரீஸ் செல்ல விரும்புகிறார் ராணி (கங்கணா ரணாவத்). அதற்கான டிக்கெட் உள்ளிட்ட எல்லா தயாரிப்புகளும் ஏற்பாடாகிய நிலையில், விருப்பமில்லை என்று மாப்பிள்ளை கூறிவிடுவதால் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் கங்கணா ரணாவத் உடைந்து போகிறார். திருமணம் நடைபெறாவிட்டாலும் தேனிலவு செல்கிறேன் என்று கங்கணா தனியாக பாரீஸ் செல்கிறார். அந்தப் பயணம் கங்கணாவுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. புதிதாய் மலர்ந்ததைப் போல, தன் இல்லம் திரும்புகிறார். அதே மாப்பிள்ளை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் போது கங்கணா மறுத்து, சுதந்திர வெளியில் பறப்பதே ‘குயின்’ படத்தின் கதை.

பெண்களுக்கான சுதந்திரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் பதிவு செய்த படம் ‘குயின்’. முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதை, திரைக்கதையை எந்த மொழியில் இயக்கினாலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

‘குயின்’ தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். தமிழில் கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்கவிருந்த தமன்னா, இப்படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை மற்ற படங்களுக்கு ஒதுக்கினார். இதனால் ‘குயின்’ ரீமேக் கைவிடப்பட்டது என தகவல் வெளியானது.

ஆனால், ‘குயின்’ தமிழ் ரீமேக் கைவிடப்படவில்லை. 4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகவுள்ளது. ஆகையால் தமிழ் ரீமேக்கிற்கு ஒதுக்கப்பட்ட பொருட்செலவில், தமன்னாவின் சம்பளத்துக்கு ஒத்துவரவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நாயகி நடிப்பார் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேவதி, தமன்னா, சுஹாசினி என யாரும் தமிழ் ரீமேக் படத்தில் தற்போது இல்லை எனத் தெரியவந்துள்ளது. தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் தமன்னாவுக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்க உள்ளதாகவும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *