பிரியதர்ஷன் – உதயநிதி படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஒப்பந்தம்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எம்.எஸ்.பாஸ்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’. தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஃபகத் பாசிலுக்கு வெற்றியைத் தேடித் தந்த படம் இது.
பெரிய லட்சியங்களோ, குறிக்கோளோ இல்லாமல் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஃபகத் பாசில். தன் அப்பா காத்திருந்து மிகச் சிறந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வைக் கண்டதும், இத்தனை நாள் தான் எடுத்தது புகைப்படங்களே இல்லை என்பதை உணர்கிறார். அப்பாவைப் போல மிகச் சிறந்த புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறார். ஒரு கல்லூரி மாணவியைப் புகைப்படம் எடுக்க அது பிரபல மலையாளப் பத்திரிகையில் வெளியாகிறது. ஃபகத் வாழ்வின் சில மகிழ்ச்சி தருணங்களில் லயிக்கும் போது அவருக்கு ஓர் அவமானம் ஏற்படுகிறது. அதற்குக் காரணமானவருடன் மோதி தன் இருப்பை, வெற்றியைப் பதிவு செய்வதே மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் கதை.
இயல்பான சினிமாவுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் தற்போது தமிழில் மறு உருவாக்கம் (ரீமேக்) செய்யப்படுகிறது. பிரியதர்ஷன் இயக்கும் இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கிறார். தமிழுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களைச் செய்து, நகைச்சுவைக் காட்சிகளை அதிகரித்துள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிக்கிற படங்களில் எல்லாம் பாராட்டை அள்ளிக்கொண்டு போகும் எம்.எஸ்.பாஸ்கர் இப்படத்திலும் தன் தேர்ந்த நடிப்பை வழங்குவார் என நம்பப்படுகிறது.
நாயகியாக நமீதா ப்ரமோத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. முழுக்க தேனியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.