கேன்சர் நோயாளிகளுக்காக முடி தானம் அளித்தார் இயக்குநர் உஷா கிருஷ்ணன்

 

கேன்சர் நோயாளிகளுக்காக தன் முடியை தானம் அளித்திருக்கிறார் ‘ராஜா மந்திரி’ இயக்குநர் உஷா கிருஷ்ணன்.

தானம் செய்யப்படுவர்களின் முடியை வைத்து விக் தயாரிக்கப்பட்டு அது கேன்சர் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலையில், உஷா கிருஷ்ணன் தானாக முன்வந்து முடிதானம் அளித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

”ஏன்? ஏன் திடீரென்று முடி தானம்? திடீர் என்றெல்லாம் இல்லை. நிறைய தடவை யோசித்திருக்கிறேன். கேன்சர் நோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்க முடி குறைந்தபட்சம் 15 இன்ச் இருக்க வேண்டும். வளரட்டும். யோசிப்போம் என்று விட்டுட்டேன். வளர்ந்த பிறகு பாய்கட் பண்ணலாம் என்று நினைத்தால், இருந்ததே 15 இன்ச்தான். என்னை மொட்டையில் பார்க்க எனக்கே தைரியம் இல்லை. அதனால வேண்டாம் என்று தள்ளிப்போட்டேன்.

ஆனால், முடியை தானமாக வழங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப தோன்றிக்கொண்டே இருந்தது. இப்போது இல்லையென்றால் இனி எப்போது என்று முடிவெடுத்து மறுயோசனைக்கு செல்லாமல், யார் என்ன ரியாக்‌ஷன் தருவார்கள் என யோசிக்காமல் தானம் அளிப்பவர்களுக்கான விதிமுறைகளைப் படித்து க்ரீன் ட்ரெண்ட்ஸில் போய் அமர்ந்தேன்.

முடி குறைந்தது 15 இன்ச் இருக்க வேண்டும், பொடுகு, வேறு தலைப் பிரச்சினைகள் இருக்கக் கூடாது. பெர்மனண்ட் கலரிங், டையிங், கர்லிங் பண்ணியிருக்கக் கூடாது. போனி டெயில் போட்டு, முனைகள் சமமாக வெட்டப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரித்து, இறுக்கமாக கட்டவேண்டும். வெட்டி தரையில் விழுந்ததோ, முறையாக அடுக்கப்படாததையோ வைத்து விக் செய்யமுடியாது. அவ்வளவுதான் விதிமுறைகள்.

முடியை மூன்று பகுதியாகப் பிரித்து, கட்டியிருந்த முடியை ஒரு பாலீத்தின் பையில் வைத்து சீல் செய்து, அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின், ஆந்திரா பேங்க் பில்டிங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள ஹேர் டோனார் பிரிவில் கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் உஷா கிருஷ்ணன்.

மேலும் அவர் முகநூலில் வெளியிட்ட இன்னொரு பதிவில், ”புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி கொட்டினால் அதற்குப் பிறகு வளராது. அவர்கள் விக் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதிக பணம் தேவைப்படும். எளிய மக்களுக்கு அது சாத்தியமில்லை. அதனால், என்னால் முடிந்த உதவியாக என் தலைமுடியைத் தானமாக அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *