காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: சண்டையில் ஒரு வீரர் பலி

வடக்கு காஷ்மீரின் நவுகாம் செக்டாரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம், 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் அவ்வப்போது முறியடித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீரின் மச்சில் செக்டாரில் உள்ள எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இதையடுத்து உஷாரான பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் புகுந்து தப்பிக்க முயன்ற தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்வாரா மாவட்டம் நவுகாம் செக்டாரில் இன்று மீண்டும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக களமிறங்கியது. அப்போது நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் இரண்டாவது ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது. கடந்த 15 தினங்களில் 4 முறையாக ஊடுருவல் முயற்சியை முறியடிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *