அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும்: ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என கோவையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி கூறியுள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் இயங்கி கொண்டு இருக்கிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டி.டி.வி தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம். ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர்களே தெரிவித்துள்ளனர்.
எங்களை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் தெளிவான ஒரு கருத்தை சொல்லியுள்ளார். எங்களால் இந்த ஆட்சிக்கு எந்த பங்கமும் வராது. உறுதுணையாக இருந்து ஆட்சியை காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார். அதுவே தான் என்னுடைய கருத்தும்.
அம்மாவால் உருவான இந்த ஆட்சி கவிழாது. ஆட்சி மாற்றமும் ஏற்படாது. எக்காரணத்தை கொண்டும் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. எதிர்கட்சிகள் தேவையில்லாமல் குறை கூறி வருகிறார்கள்.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் 2 அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.