உலகின் முதன்மை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

உலகின் முதன்மை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன் முறையாக இடம் பிடித்து உள்ளது.
க்யூ.எஸ். வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங் என்ற இங்கிலாந்து நிறுவனம் வருடந்தோறும் உலக முதன்மை பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களில் பாடம் கற்பிக்கும் முறை, கல்வியின் தரம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உலகமயமாக்கல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 959 பல்கலைக்கழகங்களில் 20 கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. 172-வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 179-வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ்) கல்வி நிறுவனம் 190-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்து உள்ளது.
ஐதராபாத் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ஜாதவபூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் முதன் முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.
மும்பை, ஐ.ஐ.டி. இயக்குனர் தேவாங்க காகார் கூறும்போது, மும்பை ஐ.ஐ.டி. கடந்த ஆண்டு 219-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 179-வது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுடைய கல்வி தரத்தை உயர்த்தியதற்கும், ஆராய்ச்சி பிரிவை மேம்படுத்தியதற்கும் கிடைத்த வெற்றியாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *