தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள் தொடங்க அரசு திட்டம்
தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகளை தொடங்கி மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணல் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. திருச்சி, கரூர், விழுப்புரம், வேலூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக 70 புதிய மணல் குவாரிகளை தொடங்கி மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மணல் குவாரிகள் 3 வருடங்கள் செயல்படும். அதன் பிறகு எம்.சாண்ட் மணல் முழு வீச்சில் விற்பனைக்கு வரும்.
எம்.சாண்ட் மணலை உறபத்தி செய்யும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. எம்.சாண்ட் மணல் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் எம்.சாண்ட் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய மணல் குவாரிகள் தொடங்கப்படுவது தொடர்பாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிதாக திறக்கப்படும் மணல் குவாரிகள் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் உள்ள குவாரிகளில் அதிக மணல் கிடைக்கிறது. காவிரி ஆற்றிலும் கணிசமான அளவுக்கு மணல் உள்ளது.
மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் உடனுக்குடன் புதிய மணல் குவாரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மணல் குவாரிகள் அனுமதி பெற பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதிருப்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகிறது. தற்போது 21 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து தினமும் 7 ஆயிரம் யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மணல் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.