புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ரூ.231.23 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்படி கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு நாளை 9-ந்தேதி புதிய மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்குகிறார். மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை முன்னிலை வகிக்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்து அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து மற்றும் எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவையொட்டி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளை நேற்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். முதல்வர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய மருத்துவக்கல்லூரி குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
இக்கல்லூரி சுமார் 9 லட்சம் சதுரடியில் ரூ.231.23 கோடி மதிப்பில் 31 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இரு விரிவுரையாளர் அரங்கம், நூலகம், கலையரங்கம், ஆய்வுக்கூடம், பயிற்சிப்பட்டறை அரங்கம், 20.559 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனைக்கென 700 படுக்கைகள் கொண்ட அறைகள், வெளி நோயாளிகள் பிரிவு, பிணவறை, கட்டண கழிப்பிடம், நவீன சமையல் கூடம் , இருசக்கரம் வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி நிறுத்துமிடம், வங்கி, தபால் நிலையம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது .
ஆண், பெண் இருபாலருக்கென தனித்தனி விடுதி கட்டிடம், முதல்வர் குடியிருப்பு, இருக்கை மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு, உடற்பயிற்சிக்கூடம், ஆண், பெண் குடியிருப்புகள் என மொத்தம் சுமார் 9 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் 2017- 2018 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதிய மாணவ சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கி விட்டது .
இவ்வாறு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.