மின்சாரம் தாக்கி பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மின்சாரம் தாக்கி பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம், கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் பம்பு செட்டை இயக்க சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகள் லிட்வின் புனிதா மின் விளக்கு கம்பம் சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பஞ்சு காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாவித்திரி தனது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சங்கனுர் கிராமத்தைச் சேர்ந்த பெனிடிக் லாரண்ஸ் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளப்புறம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மேற்கண்ட 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.