இடைத்தரகர் சுகேஷ், கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்: 22-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் மீண்டும் கைதான இடைத்தரகர் சுகேஷ் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 22-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்ற புகாரில் டெல்லியில் இடைத்தரகர் சுகேசை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் தினகரனும் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் ஜாமீனில் வந்தார்.
இந்த நிலையில் இடைத்தரகர் சுகேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. இதேபோல் கோவை சைபர் கிரைம் போலீசிலும் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை கோர்ட்டில் சுகேஷ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
கோவை கணபதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சமையலறை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-12-2010-ம் ஆண்டில் கர்நாடக மாநில முதல்-மந்திரி அலுவலகத்தில் உள்ள இணை செயலர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒரு நபர், போனில் ராஜகோபாலிடம் பேசினார்.
அப்போது பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபரகணங்கள் டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளதா? என்று அந்த நபர் கேட்டார். அதற்கு ராஜகோபால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் உடனே பெல்லாரி வரமுடியாது என்றும் கூறினார்.
இதையடுத்து அந்த நபர் வங்கி கணக்கில் ரூ.14,500 செலுத்துங்கள் என்று கூறினார். அதன்படி ராஜகோபாலும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.
சில நாட்கள் கழித்து ரூ.29 ஆயிரமும், ஒரு மாதம் கழித்து ரூ.2 லட்சம் வீதமும் அந்த நபருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராஜகோபால் எதிர்பார்த்த டெண்டர் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இந்த மோசடி குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் மோசடி உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜகோபாலிடம் மோசடி செய்தது பெங்களூர் பவானி நகரை சேர்ந்த சுகேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு சுகேஷ், தனது தந்தை சந்திர சேகரின் வங்கி கணக்கை பயன்படுத்தி உள்ளார். மேலும் இதற்கு தந்தையும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுகேசை போலீசார் கைது செய்து கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையின் போதே சுகேஷ் ஜாமீன் பெற்றார்.
அதன்பின்னர் நடந்த வழக்கு விசாரணையில் சுகேஷ் ஆஜராகவில்லை. சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் சுகேசுக்கு கோவை கோர்ட்டு கடந்த 9-1-2017 அன்று பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேசை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை சைபர் கிரைம் போலீசார், நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் பிடிவாரண்டு குறித்து தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கோவையில் நடந்த மோசடி வழக்கிலும் சுகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு ரெயில் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் அழைத்து வந்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் முன்னிலையில் சுகேசை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுகேஷ் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுகேசுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். மீண்டும் நாளை ரெயில் மூலம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறது.
சுகேஷ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டதையொட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *