சென்னை அண்ணா சாலையில் சுரங்க மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும்
அண்ணா சாலையில் தோண்டப் பட்டுள்ள சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தினப் பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம், பணிகளை குறித்த காலத்தில் முடிக்காததால் வெளியேற்றப்பட்டது.
எஞ்சியுள்ள பணிகளை, அதாவது சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரை பணிகளை மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. ஆனால், டிஎம்எஸ் முதல் மே தினப் பூங்கா வரையிலான பணிகள் சுமார் 15 மாதங்களாக கிடப்பில் இருந்தது. அதன்பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் அடுத்தகட்டமாக நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரல் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக மீனம்பாக்கத்துக்கு நேரடியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அண்ணா சாலையில் தோண்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை யில் ரயில்பாதைகள் அமைக்கும் பணி வரும் செப்டம்பரில் நிறைவடையும். பின்னர், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நடக்கும். இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.