பெரும்பான்மை குறைந்தால் ஆளுநரை சந்திப்போம்: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் பெரும்பான்மை பலம் குறைந்தால் ஆளுநர், குடியரசுத் தலைவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோவூரில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குளம் தூர்வாரும் பணியை ஸ்டாலின் மேற்பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்கள், தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சி மூன்று அணியாக பிரிந்து கிடக்கிறதே என கேள்வி எழுப்ப, “தமிழக அரசின் பெரும்பான்மை பலம் குறைந்தால் ஆளுநர், குடியரசுத் தலைவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம்” என்றார்.
தமிழகத்தில் தூர்வாரும் பணியில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “தமிழக அரசை பாஜக இயக்குகிறது என்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து உறுதி செய்துள்ளது.
மக்கள் பணியை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சியை தக்கவைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்” என்றார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட கட்சி, மதவாத கட்சி என்று கூறி பாஜகவை ஒதுக்கி வைக்கக் கூடாது.
இஸ்லாமியரான அப்துல் கலாமை குடியரசு தலைவர் ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி தான். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிப்பதில் தவறில்லை” எனக் கூறியிருந்தார்.