2 மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்: சென்னை திரும்பிய ரஜினி தகவல்
மும்பையில் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி நேற்று சென்னை திரும்பினார். அடுத்தகட்ட ரசிகர்கள் சந்திப்பு 2 மாதத்தில் இருக்கும் என்று அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு, கடந்த மாதத்தில் 5 நாட்கள் சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு முடிந்து மீண்டும் ரசிகர்களைச் சந்திப்பதாக கூறினார். இந்த நிலையில், பா.இரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு, மும்பையில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி மும்பை சென்ற ரஜினி, அங்கு 10 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண் டார். அதை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும் பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘நடந்துவரும் ‘காலா’ திரைப்படப் பணி மிகவும் திருப்தியாக இருக்கிறது. ‘காலா’ அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக வரும் 24-ம் தேதி மீண்டும் மும்பை செல்ல உள்ளேன். மற்ற மாவட்ட ரசிகர்களை இன்னும் 2 மாதங்களில் சந்திப்பேன்’’ என்றார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பதில் எதுவும் கூறவில்லை.