நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.1.11 கோடி அபராதம் ரத்தை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு
வருமானத்தை மறைத்த குற்றத்துக் காக நடிகை திரிஷாவுக்கு விதிக்கப் பட்ட ரூ.1.11 கோடி அபராதத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
முன்னணி திரைப்பட நடிகையான திரிஷா கடந்த 2010-11-ம் ஆண்டில் ரூ.89 லட்சம் மட்டுமே வருவாய் ஈட்டியதாக கணக்கு சமர்ப்பித்தார். ஆனால் அவர் தனது உண்மையான வருமானத்தை மறைத்துள்ளதாக வருமானவரித்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து திரிஷா ரூ.3.50 கோடியை தனது கூடுதல் வருமானமாக மீண்டும் கணக்கு காண்பித்தார்.
ஆனால், உண்மையான வருமானத்தை மறைத்து ஏமாற்றியதாக நடிகை திரிஷாவுக்கு வருமான வரித்துறை ரூ. 1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த அபராதத் தொகையை எதிர்த்து திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது.
அதில், “திரிஷா தனது வருமா னத்தை சரிவர கணக்கு காண் பிக்கவில்லை. வருமான வரித் துறையை ஏமாற்றியதால்தான் அவருக்கு ரூ.1.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இதை கவனத்தில் கொள்ளாமல் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரியி ருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.