நாடு முழுவதும் ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்: எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வரும் ஜூன் 16-ம் தேதி முதல் தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஏற்கெனவே மே 1-ம் தேதி முதல் உதய்பூர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, சண்டீகர், விசாகப் பட்டினம் என 5 இடங்களில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 5 நகரங்களிலும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 நிறுவனங்கள் தினமும் விலை நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்ததால் நாடு முழுவதும் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் 16-ம் தேதி முதல் நாடு முழுவதி லும் உள்ள 58,000 பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தும் அந்நிய செலாவணி விகிதங்களைப் பொறுத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இப்படி நிர்ணயித் தால் ஒரு லிட்டருக்கு சில பைசா கூடுதலாகவோ அல்லது குறை வாகவோ பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படும். மேலும் விலையில் நகரத்துக்கு நகரமோ அல்லது ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களுக்கும் இடையே கூட வேறுபாடு இருக்கலாம்.
தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் மிகப் பெரிய விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. நுகர்வோர்கள் சந்தையின் மாற்றத்தை எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும் என எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.