ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க: கஜகஸ்தான் சென்றார் பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் நூர்சுல்தான் நசர்பேவை சந்தித்துப் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதிதாக இணைய உள்ளன.
இந்நிலையில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஸ்தானா சென்றார். அங்கு கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பேவை சந்தித்துப் பேசினார்.
மாநாட்டில் பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்ற உள்ளார். அதன்பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.