செவ்வாய் கிரகத்தில் அகப்பட்டுக் கொண்டாலும் காப்பாற்றுவோம்: ட்விட்டர்வாசி கிண்டலுக்கு சுஷ்மா பதிலடி
“செவ்வாய் கிரகத்தில் அகப்பட்டுக் கொண்டாலும் இந்திய தூதரகம் உதவும்” என்று சுஷ்மா ஸ்வராஜ், ட்விட்டரில் கேலி செய்த ஒருவருக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்தார்.
கரண் சைனி என்ற ஒருவர் தனது ட்விட்டரில், “நான் செவ்வாய்கிரகத்தில் அகப்பட்டு கொண்டேன். (987 நாட்களுக்கு முன்) மங்கள்யான் மூலமாக அனுப்பிய உணவு தீர்ந்து விட்டது. மங்கள்யான் -2 எப்போது அனுப்புவீர்கள்?” என்று குறிப்பிட்டிருந்தார்.
அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது அவர்களுக்கு உதவி புரிந்து வரும் சுஷ்மா ஸ்வராஜ், ட்விட்டர்வாசிகளிடையே மிகவும் பிரபலமாகத் திகழ்ந்து வருவதோடு, வெளிநாடு வாழ் இந்தியப் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு ஆபத்பாந்தவராகத் திகழ்ந்து வருவது அன்றாடம் செய்தியாகும் வரும் வேளையில் அவரைக் கேலி செய்யும் விதமாக கரண் சைனி ட்வீட் செய்ததை நெட்டிசன்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
“ஒருவர் உண்மையிலேயே பெரிய காரியங்களை செய்து வரும் நிலையில் குறைந்தது அவரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், இவரைப் போன்றவர்களை கேலி செய்வது கவன ஈர்ப்புக்கு வேண்டுமானால் உதவுமே தவிர மரியாதையைப் பெற்றுத்தராது” என்று கரண் சைனியக் கண்டித்து ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இதற்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ், “நீங்கள் செவ்வாய் கிரகத்தில் அகப்பட்டுக்கொண்டாலும் அங்குள்ள இந்தியத் தூதரகம் உங்களுக்கு உதவும்” என்று பதில் அளித்துள்ளார்.
கரண் சைனிக்கு எதிராக நிறைய ட்வீட்கள் குவிந்தவுடன், சைனி மீண்டும், “அயலுறவு அமைச்சகத்துக்கு ஐஎஸ்ஆர்ஓ ஆகியவை மீது எனக்கும் நமக்கு வானளாவிய மரியாதை உண்டு. என்னுடைய அந்த ட்வீட் வெறும் நகைச்சுவை மட்டுமே. தேசமே முதல் அதில் சமரசம் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.