பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?

கலப்பட பொருட்கள் பற்றிய அறிவு பொதுமக்களுக்கு வந்து விட்டாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்களை உணவாக சாப்பிடக்கூடிய மோசமான சூழ்நிலை வந்துவிட்டது. பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகளை கீழே காணலாம்.
அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படுவதால் இதை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதேபோல பல பொருட்களில் கலப்படம் செய்வதும் அதிகரித்து வருகிறது.
பாலில் உரம் மற்றும் சோப் ஆயில் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சரே புகார் கூறி இருக்கிறார். கலப்பட பொருட்கள் பற்றிய அறிவு பொதுமக்களுக்கு வந்து விட்டாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்களை உணவாக சாப்பிடக்கூடிய மோசமான சூழ்நிலை வந்துவிட்டது.
பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவற்றை சாப்பிடக் கூடிய சூழ்நிலை வந்து விட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது.
பிளாஸ்டிக் சர்க்கரை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலம் பொன்னம்மாப்பேட்டையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசியும், கர்நாடகாவில் பிளாஸ்டிக் சர்க்கரையும் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு வட மாநிலங்களில் பிளாஸ்டிக் முட்டைகோஸ் விற்பனைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் கலந்த உணவு பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு உணவுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூரில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்து கண்டுபிடிக்கப்பட்டு அது தடை செய்யப்பட்டு உள்ளது.
வழக்கமாக பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உள்ளூரில் உள்ள சிலர் அதே பெயரில் போலியான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இப்போது லாபம் கிடைக்கும் என்பதற்காக உணவு பொருட்களில் பிளாஸ்டிக்கை கலப்படம் செய்து விட்டனர்.
பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க எளிய வழிகள் வருமாறு:-
* அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். போட்டவுடன் அது மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி. இல்லை என்றால் அது நல்ல அரிசியாகும்.
* அரிசியை தீப்பெட்டியால் கொளுத்திப் பார்க்க வேண்டும். அப்போது பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என்பதை கண்டுபிடித்து விடலாம்.
* வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதில் பூஞ்சை வராவிட்டால் அது பிளாஸ்டிக் அரிசியாகும். பூஞ்சை வந்தால் அது நல்ல அரிசியாகும்.
* சட்டியில் எண்ணெயை காயவைத்து அதில் சிறிது அரிசியை போட்டால் பொரியும். அப்படி பொரிந்தால் அது நல்ல அரிசி. பொரியாமல் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
* தண்ணீரில் போட்டு அரிசியை கொதிக்க வைத்தால் மேலே வெண்படலம் போல் ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும். நன்றாக கொதித்து நுரை வந்தால் அது நல்ல அரிசியாகும்.
* கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மாவு வெள்ளையாக வந்தால் அது நல்ல அரிசி. மஞ்சள் நிறத்தில் வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
பிளாஸ்டிக் அரிசியை யாராவது விற்பனை செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் எச்சரித்து உள்ளார்.
பிளாஸ்டிக் கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று சேலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறினார்.
பிளாஸ்டிக் பொருட்களானது மக்காத தன்மை கொண்டது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவற்றை சாப்பிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் வரும். வயிற்றுவலியும், செரிமான கோளாறுகளும் ஏற்படும்.
சிலருக்கு வாந்தி மயக்கமும் ஏற்படும். புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு போன்ற அபாயகரமான நோய்களும் ஏற்படும். மனித உயிரோடு விளையாடும் கலப்படக்காரர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *