கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் தகவல்
கத்தாரில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன. இவற்றில் அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து ஆகிய கத்தார் செல்வதற்கான அனைத்து வழி போக்குவரத்தையும் மூடிவிட்டன.
குறிப்பாக கத்தார் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அந்நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்வதையும் தடை செய்துள்ளன. இதன் காரணமாக கத்தார் வழியே செல்லும் விமான பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனை அடுத்து கத்தாரில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அங்குள்ள அரசு துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கத்தார் அரசு தரப்பில், விரைவில் நிலைமை சீராகும், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உணவுப்பொருட்கள் கொள்முதலில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ள இந்தியர்கள் தாங்கள் முன்பதிவு செய்த டிராவல் நிறுவனங்களை அணுகி மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.