கேரளாவில் ஜூலை 1-ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன: பினராயி விஜயன்

கேரளாவில் மதுபான பார்கள் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதுபற்றிய அறிவிப்பை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று வெளியிட்டார்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது 5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மூடப்பட்ட மதுபான ‘பார்’களை மீண்டும் திறக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, அரசுக்கு சிபாரிசு செய்தது.
அதன்படி புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ள கேரள அரசு, வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் மீண்டும் மதுபான பார்களை திறப்பதற்கு அனுமதி வழங்க முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மதுபான கொள்கை தோல்வி அடைந்து விட்டது. 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுபான பார்களை மூட உத்தரவிட்டதால், சுற்றுலா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கேரள அரசு தற்போது புதிய மதுபான கொள்கையை வகுத்து உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அன்று முதல் கேரளாவில் உள்ள 3 மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்கள் திறக்க உரிமம் வழங்கப்படும்.
மதுபானம் அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21 வயதில் இருந்து 23 வயதாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுபான கடைகள் இருக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் மதுபான பார்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவை வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர் வைக்கம் விஸ்வம் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து பார்களும் மூடப்பட்ட போதிலும் கேரளாவில் மதுபானம் அருந்துவது குறையவில்லை என்றும், மதுபானம் கிடைப்பதை கட்டுப்படுத்துவது தங்கள் கொள்கை இல்லை என்றும், விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் மது அருந்துவதை குறைப்பதுதான் தங்கள் கொள்கை என்றும் அப்போது அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி மதுபான பார்களை திறக்க ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளாவில் மீண்டும் மதுபான பார்களை திறக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *