கிரண்பேடி அத்துமீறல் பற்றி பிரதமரிடம் புகார்: நாராயணசாமி பேட்டி
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்துக்கு மீறி செயல்படுகிறார். இது குறித்து பிரதம மந்திரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்துள்ளேன் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்தியபிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்து வருகிறது. இதற்கு காரணம் வறட்சி மற்றும் விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காததே ஆகும்.
மத்தியபிரதேசத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எல்லையிலேயே எந்த முகாந்திரமும் இல்லாமல் அத்துமீறி கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் உரிமை உண்டு.
புதுவையில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. புதுவை மாநிலத்தில் துணை ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது.
மாநில அரசின் அன்றாட நிர்வாகத்திற்குள் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு உரிமை கிடையாது.
இது தொடர்பாக அவரிடம் நேரில் கூறி இருக்கிறேன். கடிதம் மூலமும், அமைச்சர்கள் மூலமும் தெரிவித்து உள்ளேன்.
ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்துக்கு மீறி செயல்படுகிறார். இது குறித்து பிரதம மந்திரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் உள் கட்சி பிரச்சினை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.