ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை அ.தி.மு.க.ஆட்சி நீடிக்கும்: ஜி.கே.மணி

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வினரின் ஆதரவு தேவைப்படுவதால் இப்போதைக்கு ஆட்சி கலைப்பு ஏற்பட வாய்ப்பில்லை என ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ம.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள மாநில-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளும், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.
மது ஓழிப்பு குறித்தும், பூரண மதுவிலக்கு கொண்டு வர பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வரும் 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மாலை 4 மணிக்கு பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், நானும் (ஜி.கே.மணி) கலந்து கொள்கிறோம். மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க கூடாது.
மத்திய அரசு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரியால்(ஜி.எஸ்.டி) சிறு-குறு, நெசவு தொழில்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வினர் தங்கள் உள்கட்சி பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வினரின் ஆதரவு தேவைப்படுவதால் இப்போதைக்கு ஆட்சி கலைப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *