சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் தனது கடைசி லீக்கில் இன்று மல்லுகட்டுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 9-வது லீக்கில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, மோர்தாசா தலைமையிலான வங்காளதேசத்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் வெற்றி பெறும் நிலையில் இருந்து மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதானது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதே போல் வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் மழை காப்பாற்றியது. பாதியில் கைவிடப்பட்டதால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
பயிற்சியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், கப்தில்.
தலா ஒரு புள்ளியுடன் உள்ள நியூசிலாந்து, வங்காளசேத்துக்கு இது தான் கடைசி லீக்காகும். இதில் கட்டாயம் வென்றாக வேண்டும். தோல்வி காணும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெற்றாலும் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது. அதாவது இதே பிரிவில் நாளை நடக்கும் கடைசி லீக்கில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதன் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.
ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஏற்கனவே அரைஇறுதியை எட்டி விட்ட இங்கிலாந்துடன் சேர்ந்து 2-வது அணியாக 4 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும். மாறாக தோல்வியை தழுவினால் நியூசிலாந்து அல்லது வங்காளதேசம் ஆகிய அணிகளில் ஒன்றுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். மழை குறுக்கிட்டால் மீண்டும் சிக்கல் உருவாகும். இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது.
இவ்விருஅணிகளும் இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 21-ல் நியூசிலாந்தும், 9-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரின் போது வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *