சாதி – மதவாத கட்சிகளுடன் ரஜினி இணையக்கூடாது: திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கும், அரசியல் கட்சியில் சேருவதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அவர் சாதி, மதவாத கட்சிகளுடன் இணையக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
குடியாத்தம் நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல் (ஜி.டி.பி.) 4 சதவீதம் குறைந்து பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஜி.டி.பி. வீழ்ச்சிக்கு பணமதிப்பு நீக்கம் ஒருகாரணம். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
தமிழக அரசு சுதந்திரமாக இயங்கவில்லை. இதில் மத்திய அரசின் தலையீடு வெளிப்படையாக உள்ளது.
மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும். இந்த கூட்டணி எம்.பி. தேர்தலுக்கும் இருக்க வேண்டும். இதற்கு முக்கியமாக இடதுசாரிகள் ஜனநாயக மதசார்பற்ற முறையை ஏற்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க. அரசு சுதந்திரமாக செயல்பட்டு இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தை நிறைவு செய்ய வேண்டும். மத்திய அரசு ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசை சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாட்டு இறைச்சி மற்றும் மாடுகள் சம்பந்தமாக கொண்டு வந்த புதிய சட்ட விதிகளை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கும், அரசியல் கட்சியில் சேருவதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அவர் கட்சி தொடங்குவதை போட்டியாக கருதவில்லை. விடுதலை சிறுத்தைகள் வாழ்த்துகிறது. ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் சாதி, மதவாத கட்சிகளுடன் அவர் இணையக்கூடாது. அவர்களை அடையாளபடுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *