சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தென் ஆப்பிரிக்க வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் தென் ஆப்பிரிக்க வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து அபிதாபிக்கு செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோகன் என்பவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்த போது மாத்திரை மற்றும் பால் பவுடர் போன்று இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்த போது அவை ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து போதைப் பொருளுடன் ஜோகனை கைது செய்தனர். மொத்தம் 2 கிலோ ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடி ஆகும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
கைதான ஜோகன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவன் ஆவான். அவன் ஏற்கனவே இதேபோல் போதைப்பொருள் கடத்தியதாக 2 முறை கைது செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.