தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
தமிழகத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக திருவாடானையில் 5 செ.மீ. (சென்டி மீட்டர்), திருமயம், அவினாசி, நடுவட்டம், தொண்டியில் தலா 3 சென்டி மீட்டர், அதிராமபட்டினம், ஊட்டி, காங்கேயம், கரம்பக்குடி, ஆலங்குடியில் தலா 2 செ.மீ., திருப்பூர், கே.பாலம் (நீலகிரி மாவட்டம்), கோத்தகிரி, கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
வங்க கடலில் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒரிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.