ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து

குறைந்த கட்டணத்தில் மக்கள் விமான பயணம் செய்யும் திட்டத்தின்படி ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை தொடங்க தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே உள்ள விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்தவும், நாட்டில் பயன்பாட்டில் இல்லாத மற்றும் குறைவான பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்காக, தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை 21.10.2016 அன்று வெளியிட்டது.
மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை (உதான்) தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்தை எளிமையாக்கி, குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்ள ஏதுவாக விமான சேவை வழங்குவது ஆகும்.
தமிழகத்தில் முதற்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமானச் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் சிறிய நகரங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டு, அந்த நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, தொழில் மற்றும் வர்த்தகம் பெருகி, வேலைவாய்ப்பு அதிகரிக்க வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.என். சவுபே, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரெ, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகபாத்ரா, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உஷா பாதே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *