ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரை 9 பேர் குழு தேர்வு செய்கிறது
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை 9 பேர் கொண்ட குழு ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை 9 பேர் கொண்ட குழு ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்கிறது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், சரத்யாதவின் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. வேட்பாளரை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானித்து உள்ளன.
வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 26-ந்தேதி அவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய துணைக்குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 9 முக்கிய எதிர்க்கட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவில் டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும் தி.மு.க., இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுகிறார்கள்.
இந்த குழு அடுத்த வாரம் கூடி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது பற்றி ஆலோசனை நடத்துகிறது. இந்த குழு ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை தேர்வு செய்யும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அதன்பிறகுதான் வேட்பாளர் யார்? என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்று டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.