அந்தமான் கடலில் விழுந்து நொறுங்கிய மியான்மர் விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

அந்தமான் கடலில் விழுந்து நொறுங்கிய மியான்மர் விமான விபத்தில் பலியானவர்களில் குழந்தை உள்ளிட்ட 10 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் ‘ஒய்-8’, மெயிக் நகரத்தில் இருந்து யாங்கூனுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. 29 நிமிடங்கள் கழித்து, 18 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. மாயமான விமானம், அந்தமான் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 122 பேரும் கூண்டோடு பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 108 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். சிப்பந்திகள் 14 பேர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் மோசமான வானிலை இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களையும், பலியானவர்களையும் தேடும் பணியில் 9 போர் கப்பல்கள், 5 ராணுவ விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று காலை ஒரு குழந்தை உள்ளிட்ட 10 பேரது உடல்கள் அந்தமான் கடல் பகுதியில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோன்று விமானத்தின் ஒரு சக்கரம், கவச உடைகள், பயணிகளின் உடைமைகள் மிதந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தின் முக்கிய உடல் பாகம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை முழுவீச்சில் நடந்து வருகிறது.
விபத்துக்குள்ளான விமானம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது எனவும், அது இதுவரை 809 மணி நேரம் பறந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *