பிளாஸ்டிக் அரிசி – சர்க்கரை விற்கப்படுவதாக பீதி: தமிழக அரசு மறுப்பு

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பீதி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படவில்லை என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக்கோளாறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதே போல் கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவை விற்பனைக்கு வந்திருப்பதாகவும், அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.
தற்போது இந்த பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் பீதி ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படவில்லை என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில் “தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படவில்லை. அவை விற்பதற்கான வாய்ப்பும் இல்லை. தமிழகத்தில் உள்ள அரிசி தேவைகள் ரே‌ஷன் கடைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டிலும் அரிசி விலை கட்டுக்குள் உள்ளது.
பிளாஸ்டிக் அரிசி விற்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் இதுவரை பிளாஸ்டிக் உணவுப்பொருட்கள் எதுவும் வரவில்லை என்று அனைத்து தரப்பினரும் உறுதி செய்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய நுகர்வோர் அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது:-
பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது சாதாரண அரிசி உற்பத்தியை காட்டிலும் மிகவும் பொருள் செலவு ஆகும். எனவே பிளாஸ்டிக் அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.
குறுணை அரிசி என்று அழைக்கப்படும் சேதமடைந்த அரிசியை சேகரித்து அரைத்து அதனுடன் வேறு பொருட்களை சேர்த்து அரிசி போன்று உருவாக்குகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் அரிசியில் வெள்ளை நிறத்தை வரவழைப்பதற்காக பிளாஸ்டிக் போன்ற சில வேதிப்பொருட்களை சேர்க்கின்றனர்.
இந்த அரிசி சாதாரண அரிசியை போன்று எளிதில் வேகாது, இதைத்தான் மக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று புரிந்து கொள்கின்றனர். இது போன்ற அரிசி சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சர்க்கரையிலும் பிளாஸ்டிக் சர்க்கரை கலக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரவிக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரிசியின் மாதிரிகளை சேகரித்து அதில் ஏதேனும் போலி உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அரிசி குடோன்கள், மொத்த விற்பனை கடை களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பல மாவட்டங்களில் இருந்து ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. எனவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கதலைவர் எஸ்.பி. சொரூபன் கூறியதாவது:-
பிளாஸ்டிக் அரிசி சீனா, கொரியா நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு மறைமுகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த அரிசியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். சென்னையில் பாரிமுனை சவுகார்பேட்டை, கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள கடைகளில் திருட்டுதனமாக விற்பனை நடைபெறுகிறது.
இந்த அரிசி டைமண்ட் கற்கள் போல தோற்றத்துடன் நீட்டமாக இருக்கும். சோறு வடிக்கும் போது விரைப்பு தன்மையுடன் இருக்கும், கடந்த ஒரு ஆண்டாக பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது, பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’இணைய தளங்களில் இது குறித்து செய்தி வெளியானதால் பரபரப்பாகி உள்ளது.
பிளாஸ்டிக் அரிசியை நமது தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். சாதாரண அரிசியை விட பிளாஸ்டிக் அரிசியின் விலை சற்றுக்கூடுதலாக இருக்கும். மத்திய – மாநில அரசுகள் பிளாஸ்டிக் அரிசியின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்துக்குள் பிளாஸ்டிக் அரிசியை நுழைய விடாமல் தடை செய்ய வேண்டும்.
தமிழக வியாபாரிகள் யாரும் பிளாஸ்டிக் அரிசியை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
நமது பாரம்பரியமாக, இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் அரிசியை தான் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் அரிசி விற்பனையை யாரும் ஊக்குவிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *