எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபரிடம் அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், கோ. புதுப்பட்டி (தோப்பூர்) கிராமத்தில் புதிய எய்ம்ஸ் அதிநவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்க சரியான இடம் தேர்வு செய்யுமாறு அரசு செயலர், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கோரியதன் பேரில், கிராமத்தில் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலர் தரித்திரி பாண்டா தலைமையில் ஐவர் அடங்கிய குழு கடந்த 2015-ம் ஆண்டு பார்வையிட்டு அன்றைய தினமே கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
21 அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைப்பதற்கான அவசியம் குறித்து பிரத்யேக காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
உத்தேச நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு எதுவும் ஏற்படாத வகையில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரஸ்தாப நிலங்களை தங்க நாற்கரச் சாலையுடன் இணைக்கும் வகையில் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2 இணைப்புச் சாலைகள் உள்ளன.
பிரஸ்தாப நிலங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சாதகமான சூழல் உள்ளது. பிரஸ்தாப புலத்தில் இருந்து நாற்கர சாலை 2.5. கி.மீ. தொலைவிலும், திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் 5 கி.மீ. தொலைவிலும், மதுரை விமான நிலையம் 15 கி.மீ. தொலைவிலும், மதுரை மத்திய பஸ் நிலையம் 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தென் தமிழகத்தினுடைய மைய பகுதியில் 12 மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து எளிதில் வந்து சேரும் வண்ணம் விரிவான போக்குவரத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளது.
எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டிய அத்தியாவசியம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் தமிழக அரசு தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். இதற்காக பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த திடீர் அறிவிப்பு எடப்பாடி அரசுக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.