நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவிகிதம் குறைப்பு
தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும் என்று கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விமான சேவை குறைபாடு தொடர்பாக சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் மட்டும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதலமைச்சர் செயலக அதிகாரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக பத்திர பதிவு குறித்து விவாதிக்கப்பட்டது.
பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நில மதிப்பு குறைந்த நிலையில்கூட நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.
வருவாய் குறைந்தது
இந்த கட்டணத்தில் பத்திர பதிவு செய்ய மக்கள் தயங்கியதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. எனவே, வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும்.
அமைச்சரவை கூட்டம் முடிந்தபிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக் கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதை கருத்தில்கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9–ந்தேதி (இன்று) முதல் 33 சதவீதம் அளவு குறைத்து ஆணையிட்டுள்ளது.
தானத்திற்கு 4 சதவிகிதம்
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை (கன்வேயன்ஸ்), பரிமாற்றம் (எக்ஸ்சேஞ்ச்), தானம் (கிப்ட்) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு (செட்டில்மெண்ட்) போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சொத்தை விற்கும்போதோ, வாங்கும்போதோ, அதன் கிரய மதிப்பைவிட, அரசு வழிகாட்டி மதிப்பின்படியே சார்-பதிவாளர் அலுவலகங்களில் முத்திரை கட்டணமும், பதிவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2007-–08 காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது. இதனால் பத்திரப்பதிவும் அதிகரித்ததால் அரசுக்கு வருவாயும் உயர்ந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்ந்துகொண்டே போனது. சில பகுதிகளில் ஒரு இடத்தை உரிமையாளர் தன் சொந்த காரணங்களுக்காக மதிப்பு உயர்த்தி பதிவு செய்தால், அதே தொகை அருகில் உள்ள மற்ற நிலங்களுக்கும் வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஒரு காலகட்டம் வரை பத்திரப்பதிவு வருவாயை வெகுவாக உயர்த்தியது.
அதன்பின் நிலம், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக அதிக தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பொது அதிகாரம் பெறுதல் உள்ளிட்ட மாற்று வழிகளை கையாண்டனர். ரியல் எஸ்டேட் துறையும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததால் பத்திரப்பதிவு குறையத் தொடங்கியது.
தேர்தல் அறிக்கை நிறைவேற்றம்
தமிழ்நாட்டில், 2012-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது. ஆனால், வகைபாடு ரீதியாக இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டில் அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும், கடுமையாக உயர்ந்த வழிகாட்டி மதிப்பை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தமிழக பத்திரப்பதிவுத் துறை மிகப்பெரும் சவாலை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வருவாயை பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தற்போது வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலம் விற்பனை, பரிமாற்றம், தானம், செட்டில்மென்ட் ஆகியவற்றுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் பெறப்பட்டு வந்தது. இது தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் உயரும் என கூறப்படுகிறது.நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை குறைத்துள்ள போதிலும், பதிவுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பெரிய அளவுக்கு பலன் இல்லை. இதுவரை நிலம், வீடு வாங்குபவர்கள் அதன் மதிப்பில் முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் என மொத்தம் 8 சதவீத தொகையை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டபோதிலும் பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சொத்து வாங்குபவர்கள் முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் 4 சதவீதம் என மொத்தம் 11 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டி வரும். எனவே, வழிகாட்டி மதிப்பு குறைந்தாலும் பதிவுக் கட்டணம் அதிகரித்துள்ளது.பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலம் ரூ.900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.